கதைகள் சொல்லும் ஆசிரியர்கள் தேனுகா

ஜூன் 23, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

உலகின் சகல வசதிகளை விரல்நுனியில் பெறும் அதிஅற்புத உலகம் இது என்று விஞ்ஞானிகள், வரலாற்று அறிஞ்ர்கள் இன்றைய உலகத்தை வர்ணிக்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளேயே இணையதள வசதிகள் முழுமையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. உலகப் படத்தைக் காண்பித்து நாடுகளையும் காடுகளையும், கடல்களையும் காண்பித்த காலம் மாறி, கூகுள் எர்த் (Google earth) மூலம் உலகத்தையே உருட்டி நம் கண்முன் தமிழ்நாட்டைக் கொண்டுவந்து விடுகின்றனர். இணையத்தில் இப்போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்க்க வேண்டுமென்றால் அதன் மீது தஞ்சையின் நிலப் பரப்போடு, கோயிலையும் காட்டி விடுகின்ற வினோத உலகம் இது. ஒரு நிமிடத்தில் இலட்சக்கணக்கான இணையதளங்களைத் தேடி நமக்கு வேண்டிய தகவல்களை நம்முன் நிறுத்திக் காட்டுகின்ற வித்தியாசமான உலகம் இது. இவ்வுலகில் ஆசிரியர்கள் தகவல் சேகரிப்பின் மன்னர்களாகத் திகழ வேண்டும். நமக்குத் தெரிந்த தகவல்களை மாணவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் நல்ல நண்பர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும். நீண்ட நெடிய தொழில்நுட்ப மாறுதல்களுக்குத் தினந்தோறும் தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு இன்று ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இல்லாவிட்டால் இவர்களை ஆசிரியர்கள் என்றழைக்கப்படும் அடையாளமே தொலைந்து போகும் ஆபத்தும் நிலவுகிறது.50 மதிப்பெண்கள் வாங்குகின்ற மாணவர்களைத் தமிழகத்தில் எந்த ஆசிரியர்களும் மதிப்பதில்லை. பெற்றோர்களும் மதிப்பதில்லை. மேற்படிப்பிற்கோ இடம் கிடைப்பதில்லை. சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை உருவாக்குபவரே சிறந்த ஆசிரியராகக் கருதப்படுவது வேதனைக்கு உரியது. ஆர்வமில்லா மாணவனை ஒரு துறையில் மூழ்கடித்து, அவன் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றனர் ஆசிரியர்கள், பெற்றோர்கள். மதிப்பெண்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளாக கல்விக்கூடங்கள் மாறியுள்ளன. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள், நல்லாசிரியர்கள் விருதும் பெறுகின்றனர். ஆனால் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களோ கல்லூரியில் சேர்ந்தவுடன் மற்ற மாணவர்களோடு சகஜமாகப் பழக இயலாமல் மன உளைச்சலில் தற்கொலையும் செய்து கொள்கின்றனர் என்பது ஒரு அதிர்ச்சித் தகவல் மட்டுமே அல்ல, உண்மை நிலை இது. படி படி, எந்நேரமும் படி, எப்போதும் படி என்ற ஆசிரியர்களின், பெற்றோர்களின், கல்விக்கூடங்களின் நிர்பந்தத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இக்காலக் கல்வி மன வளர்ச்சிக்கான கல்வியாக இல்லாமல், மன உளைச்சலுக்கான கல்வியாக மாறிவிட்டுள்ளது. மாணவர்களுக்கான வேலைகளைத் தேடும் வேட்டைக்கான (job hunt) உலகமாக இது மாறியிருக்கிறது. இதனால் எங்கும் வேகம், எதிலும் வேகம் என்றொரு நிலை உருவாகி உள்ளது.மாணவர்களின் மன வளர்ச்சிக்கேற்ற கதைகள் சொல்லும் ஆசிரியர்கள் இன்று குறைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஈசாப்பின் நீதிக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், மகாபாரதக் கதைகள் போன்ற கதைகளை மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களது மனவளத்தை நாம் பெருக்க முடியும். அறம் சார்ந்த நீதிக் கதைகளையும், பாடங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அக்காலத்தில் ஆசிரியர்கள் நடத்தி வந்த மகாபாரதக் கதைகளில் கர்ண மோட்சம், அரவானைக் களத்தில் பலியிட்டு தொடங்கும் பாரத யுத்தம், அர்ஜுனனின் விதவிதமான வில்வித்தைகள், சூரிய அஸ்தமனத்தில் அம்புராப் படுக்கையில் பீஷ்மரின் மரணம், விதுர நீதி, யட்சப் பிரச்னம் போன்றவை இன்று தர்க்கத்திற்கு உரியவையாக மாறியிருப்பதும், அறிவுச் சார்ந்த கேள்விகளால் இவை தேவையற்றவை என்றாகி விட்டதும் வேதனைக்கு உரியவை. பொம்மலாட்டம், தெருக்கூத்து, நாடகம், அம்மானை, குறவஞ்சி, பள்ளு, பறையாட்டம் போன்ற பாடல் வழி தமிழர்களின் கதைச் சொல்லும் மரபு காணாமற் போய்விட்டது. இவற்றை ஆசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும். கதைக் கேட்பது மனத்திற்கு எவ்வளவு குளுமை தருகிறது. பாரதப் போரே நம் கண்முன் நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆழ்பகை, வஞ்சினம், தர்மம், கொடை என்ற மனித மனத்தின் மனக் காட்சிகளை (mind landscapes) அற்புதமாக விவரிக்கும் கதைகள் இவை. மகாபாரதக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், பேசாமடந்தை கதை, அவற்றுள் வரும் அண்டரண்ட பட்சிகளின் கதை, காத்தவராயன் கதை, பரமார்த்த குரு கதை போன்ற அற்புதமான கதைகளைச் சொல்லிக் கொடுதத் கதைசொல்லி ஆசிரியர்கள் எல்லாம் எங்கே மறைந்தார்கள்?உளவியல் அறிஞர்கள் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Frauid) கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ஓடிபஸ் எனும் கதையை வைத்து மனித மனத்தின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலகளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரெல்லா கதையின் கதாபாத்திரங்கள் மனித குணங்களை வர்ணிக்கும் அற்புதக் காட்சிகளாக இன்றும் போற்றப்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது புதிய கட்டடங்களைக் கதை சொல்லும் கட்டடங்களாக (story telling architecture) மாற்றி வருகின்றனர். பிராய்ட் போன்றோர் மரபார்ந்த நமது இந்திய கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களையே அவர் வைத்திருக்கக்கூடும்.கொஞ்ச கொஞ்சமாக அறக்கூறுகள் அழிந்து வரும் இவ்வுலகில் ஏதேனும் ஒன்றைத் தர்மமாக, பற்றுக்கோலாக ஏற்று நாம் வாழவேண்டிய நிலை உள்ளது. கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மை அதீதமான மன வளர்ச்சியின் உச்சக்கட்டமாய்தான் இன்றும் தோன்றுகிறது. இதைப் போன்ற பாத்திரங்கள் கதைகளில் மட்டுமல்ல, நம் குடும்பத்தில் அண்ணனாக, அப்பாவாக, நண்பராக, மாமனாக இப்படி பலரை வள்ளல் தன்மையோடு இன்றும் நாம் காண்கின்றோம்.அண்ணல் காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசி வந்ததற்குக் காரணம், அவர் இலண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல; அவர் இளம் பிராயத்தில் பார்த்த ஹரிச்சந்திர புராணம் எனும் கதையே அவரது வாழ்நாள் முழுவதும் உணமையே பேச வேண்டும் என்ற எண்ணத்தை விளைவித்தது. சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறு பருவத்தில் அவர் அன்னை சொன்ன கதைகளே. நீதிக் கதைகள், நாடகங்கள், இசை, ஓவியம், நாட்டியம் போன்றவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே போதிக்க வேண்டும். விடுகதை போன்ற விளையாட்டு, நாடகம் போன்ற விளையாட்டு… போன்ற விளையாட்டுகள் எல்லாம் கல்விக்கூடங்களில் இல்லாதது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வித விளையாட்டுகளும் கலைகளும் கதைகளும் நமது மூளை வளத்தை (brain circuitry) மேம்படுத்த உதவுகின்றன. இவற்றைப் பள்ளிகளில் போதிப்பவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும். ஜூராசிக் பார்க், ஹாரி பாட்டர் போன்ற படங்களின் கற்பனை விநோதங்களை வியந்து ரசித்துப் பார்க்கும் இன்றைய மாணவர்களுக்கு, விதவிதமான நமது அற்புதக் கதைகளை இளம் பருவத்திலேயே ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டனர். முடிந்தால் மாணவர்களை வைத்து இவற்றை நாடகக் காட்சிகளாக ஆக்க வேண்டும். சாக்ரடீஸ், கௌதம புத்தர், அசோகர், வடலூர் வள்ளலார் போன்று மாணவர்கள் நடித்த நாடக மரபுகளை ஆசிரியர்கள் பள்ளிகளில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இயல், இசை, நாடகம் போன்ற கலைப் பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். இவர்களது விடுகதைகள் கூட வித்தியாசமானவை. மார்கரெட் டிராவிக் (Margret Trawick) என்ற அமெரிக்கா இனவியல் (anthropologist) அறிஞர், தற்போதுள்ள உலக இனங்களுள் தமிழினக் கலைக் கூறுகள் மிகச் சிறந்தவையாக இன்றும் இருக்கின்றன என்று தனது ‘ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றி எனது குறிப்புகள்’ எனும் நூலில் கூறியுள்ளார். இன்றைய மாணவர்கள், ஒரே நேரத்தில் பல்துறை, பல்கலை அறிவைப் பெறும் (simultaneous intelligence) திறன் படைத்தவர்களாக விளங்குகின்றனர். வெறும் எழுத்து சார்ந்த படிப்பை விட (text) காட்சிப் பார்வை (visual) சார்ந்த உலகத்தின் பயன்களை மாணவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய மாணவர்களுக்கு அபரிமிதமான படைப்புத் திறன்கள் (creativity) தேவைப்படுகின்றன. கதைகள் கேட்டல், கலைகளில் ஈடுபடுதல் போன்றவற்றால் விதவிதமான படைப்பு ஆற்றல்களை உண்டுபண்ணும் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading கதைகள் சொல்லும் ஆசிரியர்கள் தேனுகா at தேனுகாவின் பக்கங்கள்.

meta

%d bloggers like this: